கட்டுரை

மலேசிய அரசியல் புதிய திருப்பம்!

மாலினி

மலேசியாவில் 2017 கணக்குப்படி,  3.12 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் 68.8% மலாய்க்காரர்கள். 23.2% சீனர்கள். 7% இந்தியர்கள். இந்தியர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். 

அந்த நாட்டில் இந்த ஆண்டு மே மாதம்  நடந்த  பொதுத் தேர்தல் உலகின் சில முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது.  அந்தத் தேர்தல் மூலம் பல வரலாற்றுத் திருப்பங்கள், எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

மலேசியாவின் பிரதமராக 92 வயது மகாதீர் முகம்மது மீண்டும் பதவி ஏற்பார் எனச் சில மாதங்கள் முன்பு வரை எவரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்காத நிலையில், மலேசியாவின் ஏழாவது பிரதமராக மே 10ஆம் தேதி அவர் மீண்டும் பதவி ஏற்றிருப்பது அடுத்த திருப்பம். இவர்தான் உலகில் ஆக அதிகமான வயதில் பிரதராகப் பதவி ஏற்று இருக்கும் அரசியல் தலைவர். 

மலேசியாவின் நான்காவது பிரதமராக 1981இல் மகாதீர் முகம்மது பொறுப்பு ஏற்று 22 ஆண்டுகளுக்குப் பின்னர் 2003 ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, பதவியிலிருந்து விலகினார். ஆனாலும் அரசியலில் அவர் கவனம் தொடர்ந்து இருந்து வந்தது.

பிரதமர் நஜிப் ரசாக்கின் சர்வாதிகாரப் போக்கு, தவறான பொருளியல் முடிவுகள், ஊழல் எல்லாம் அதிகரிக்க, வாழ்க்கைச் செலவினமும், அரசுக்கெதிராக மக்களிடையே ஏற்பட்ட கடும் அதிருப்தியும் மகாதீரை மீண்டும் தீவிர அரசியல் களத்தில் இறங்கவைத்தது. மகாதீர், நஜிப்புக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்.

அதுநாள் வரையில், அம்னோ எனப்படும் ஐக்கிய மலாய் தேசிய நிறுவனத்தின் முன்னாள் தலைவராகவும் முக்கிய பேராளார்களில் ஒருவராகவும் விளங்கிய டாக்டர் மகாதீர், அந்தக் கட்சியிலிருந்து விலகி புதுக் கட்சியைத் தொடங்கினார். எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டினார். இதில் தனது நீண்ட கால எதிரியான முன்னாள் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான அன்வார் இப்ராகிமுடன் மகாதீர் கைகோத்தார். மாற்றம் தேவை என மக்கள் மனதில் எழுச்சி ஏற்படுத்த தொடர்ச்சியாக அன்வர் மேற்கொண்ட பிரசாரமும் பழுத்த அரசியல்வாதியான மகாதீரின் செல்வாக்கும்  ஒன்றுசேர்ந்து இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியுள்ளன. 

ஆனால் அறுபதாண்டு கால சுதந்திர மலேசியாவில், இந்தியர் சமூகத்திற்காக அதிகளவு உதவிகளை வழங்கியவர் முன்னாள் பிரதமர் நஜிப். இந்தியர்களுக்குப் பிரத்தியேகமான திட்டங்களைச் செயல்படுத்தினார். தமிழ்ப்பள்ளிகள் புதுப்பிக்க 800 மில்லியன் ரிங்கிட் செலவிட்டார். கோயில்கள் மேம்பாடு, புகுமுக வகுப்புகளில் இந்திய மாணவர்களுக்கு அதிக இடங்கள்  என பல உதவிகளைச் செய்தார். மேலும்  இந்தியர் முன்னேற்றத்துக்காக SEDIP எனப்படும் அமைப்பை உருவாக்கி, ஒவ்வோர் ஆண்டும் 50 மில்லியன் ரிங்கிட் கொடுத்திருந்தார். 

அதேநேரத்தில் மகாதீரின் ஆட்சிக் காலத்தில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் அதிகமே. அப்படியிருந்தும், இந்தியர்களும் அவரது கூட்டணியை ஆதரித்துள்ளனர். அனைத்து மக்களும் மாற்றத்தை விரும்பியதும் இந்தியர்களைப் பிரதிநிதித்து வந்த ம.இ.கா மக்கள் நம்பிக்கையை முழுதாக இழந்துவிட்டதும் இதற்கு முக்கிய காரணம் எனத் தேர்தல் முடிவு பற்றி கருத்துத் தெரிவித்த மலேசிய இந்தியர்கள் பலரும் கூறினர்.

மலேசியாவில் இந்திய சமூகத்தைப் பிரதிபலிக்கும் மிகப் பெரிய கட்சியாகத் திகழ்ந்த மலேசிய இந்தியர் காங்கிரஸின் செல்வாக்கு 2008 முதல் குறிப்பிடத்தக்க அளவுக்குச் சரியத் தொடங்கியது. 

இந்தத் தேர்தலில் அந்தக் கட்சியைச் சேர்ந்த  தாப்பா தொகுதியின் வி.சரவணன், கேமரன் ஹைலண்ட்ஸ் தொகுதியின் சி.சிவராஜா இருவர் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர். 

மலேசிய இந்தியர் காங்கிரசின் தலைவராக இருந்த டாக்டர் சுப்பிரமணியம் கூடத் தோல்வி கண்டுவிட்டார். ம.இ.கா கட்சி சார்பில் போட்டியிட்ட 13 சட்டமன்றத் தொகுதிகளில் மூன்று மாநிலங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. 

அதேவேளையில், ஆட்சி அமைத்திருக்கும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் 15 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கும் மற்ற இந்தியர்களும் நிச்சயம் இந்தியர் நலன்களுக்குப் பாடுபடுவார்கள் என்று பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் ப.இராமசாமி தெரிவித்து இருக்கிறார்.

மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜனநாயகச் செயல்கட்சியின் தேசிய துணைத் தலைவரான எம். குலசேகரன், தமது முதல் பணி இந்தியர்களின் குடியுரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதுதான் என்றார். நாடாளுமன்றத்துக்கு 5வது முறையாக தேர்வுபெற்றிருக்கும் வழக்கறிஞரான இவர்தான் பக்கத்தான் ஹரப்பானின் இந்தியர்களுக்கான தேர்தல் அறிக்கையை வரைந்தவர். 

கடந்த 1970ல் 17% இந்தியர்கள் அரசாங்க வேலையில் இருந்தனர். இன்றைக்கு 4%தான். அதுவும் பெரும்பாலும் துப்புரவுப் பணி, பாதுகாவல் பணி போன்ற அடிமட்ட வேலைகள்தான். என்ன ஆனது நமது இந்தியர்களின் நிலை? ம.இ.கா இத்தனை ஆண்டுகளாக என்ன செய்துகொண்டிருந்தது,'' என்று  கேட்கும் இவர், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட செயல்திட்டங்களை நிச்சயம் புதிய அரசு செயல்படுத்தும் என்று உறுதியளித்தார். 

புதிய அரசு இந்தியர்களுக்கு 25 வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளது. இவை செயல்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க அரசு சார்பற்ற சமூகஅமைப்புகள் ஒன்றிணைந்து குழு அமைக்கப்பட உள்ளது.

ஜூன், 2018.